கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பது நம்மை கடனாளியாக்கும் என்றால், போகப் போக டெபிட் கார்டுகளை வைத்திருப்பது 'சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் கதை'யாகி விடும் போலிருக்கிறது.
"கிரெடிட் கார்டு இருந்தா நம்ம இஷ்டத்துக்கு வாங்கிட்டு அப்புறம் பில் வந்த பிறகு முழிப்போம். டெபிட் கார்டுல அப்படி இல்லையே. நம்ம அக்கவுண்ட்டில காசு இருந்த தானே அதை உபயோகிக்கவே முடியும். அதனால டெபிட் கார்டு பிரச்னையே இல்லை" என்று சொல்லும் ஆசாமியா நீங்கள்?
creditcard.com இணையமும் யாஹூவும் இணைந்து வழங்கும் இந்த அட்வைஸ்களைப் பாருங்கள்...
"பாக்குறதுக்கு கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ரெண்டுமே ஒண்ணாத் தான் இருக்கும். ஆனா ரெண்டு (பிளாஸ்டிக்கு அட்டையு)ம் ஒண்ணு இல்லைன்னு எல்லாரும் புரிஞ்சுக்கணும். ரெண்டு வகையான கார்டுகளிலும் எப்படி பரிவர்த்தனை செய்யப் படுகின்றன, எப்படி அவை பாதுக்கக்கப்படுகின்றன என்பதில் எல்லாம் நிறைய மாற்றங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்."
- John Breyault, director of the Fraud Center for the National Consumers League,
a Washington, D.C.-based advocacy group
பொதுவாகவே ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போது டெபிட் கார்டை உபயோகிப்பதை தவிருங்கள் என்பது தான் பெரும்பாலானோர் கருத்து. ஏனெனில் அது நம்முடைய வங்கிக் கணக்குடன் நேரடித் தொடர்பில் இருக்கிறது. யாராவது அதிலிருந்து பணத்தை உருவினால் மொத்தமாக உருவி விடலாம்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு கீழ்கணட பத்து சந்தர்ப்பங்களில் டெபிட் கார்டை தவிருங்கள் என்று பட்டியலிட்டுள்ளார்கள். முயன்று பார்ப்போமா?
1. போன் ஆர்டர் மற்றும் ஆன்லைனில் டெபிட் கார்டை தவிர்க்கவும். (காரணம் மேலே சொல்லியாச்சு!)
2. கார், வீடு போன்ற பெரிய அளவிலான பொருட்களை வாங்கும் போது டெபிட் கார்டினை தவிர்க்கவும். சமயங்களில் கிரெடிட் கார்டுகளை இந்தச் சமயத்தில் உபயோகித்தால் இலவச இன்சூரன்ஸ் போன்ற சலுகைகள் கிடைக்கலாம்.
3. வாடகைக்கு கார் எடுக்கும் போதோ அல்லது அது போல டெபாஸிட் கேட்கும் போதோ கிரெடிட் கார்டை உபயோகிக்கவும். வீணாக நம்முடைய பணம் முடங்குவதை தவிர்க்கலாம். கடைசியாக பில் செட்டில் செய்யும் போது தேவைப்பட்டால் டெபிட் கார்டிலோ, காசாகவோ செலுத்திக் கொள்ளுங்களேன்.
4. ரெஸ்டாரெண்ட்டுக்கு போறீங்களா? தப்பித் தவறி கூட டெபிட் கார்டு கொடுத்திடாதீங்க. எந்தப் புத்தில எந்த பாம்பு இருக்குமோ? உங்க கண் பார்வையிலிருந்து விலகி உங்களுடைய கிரெடிட் / டெபிட் கார்டுகள் சென்று வரும் ஒரு சில இடங்களில் ரெஸ்டாரெண்டுகளும் ஒன்று.
5. ஆன்லைனா இருந்தாலும் சரி, நேரடியாக உபயோகிப்பதாக இருந்தாலும் சரி.. முதல் தடவையாக உபயோகிக்கும் இடங்களில் டெபிட் கார்டை தவிர்க்கவும். அங்களைப் பத்தி ஒண்ணுமே தெரியாதில்லையா?! பக்கத்து வீட்டுக்காரனுடைய பிரெண்டோட பிரெண்டு இங்கே வாங்கிருக்காராம் அப்படீன்னு எல்லாம் நினைத்து டெபிட் கார்டை எடுத்து நீட்ட வேண்டாம். ஏதாவது மன்னார் & கம்பெனியா இருந்தா பக்கத்து வீட்டுக்காரரோட பிரெண்டோட பிரெண்டா வந்து பதில் சொல்லப் போறாரு?!
6. காசை இப்போ கொடுங்க. பொருளை அப்புறமா வாங்கிக்குங்க என்பது மாதிரியான ஆபர்களின் போது டெபிட் கார்டு தவிர்த்தல் நலம்.
7. மாதத் தவணைகள், மாதா மாதம் கட்டணம் கட்டும் சேவைகள் போன்றவற்றில் டெபிட் கார்டை உபயோகிக்காதீர்கள். சமயங்களில் நாம் சேவையை ரத்து செய்த பிறகும் கூட அவர்கள் தொடர்ந்து நமது கார்டில் பணம் எடுத்துக் கொண்டிருக்க வாய்ப்புண்டு. கிரெடிட் கார்டாக இருந்தால் சண்டை போட்டு காசை திரும்ப வாங்குவது கிரெடிட் கார்டு கம்பெனியின் தலைவலி என்று இருந்து விடலாம். (கம்ப்ளைண்ட் கொடுத்துவிட்டு!). ஆனால் டெபிட் கார்டில் அப்படி இல்லை. அதுவுமில்லாமல், தப்பித் தவறி நமது அக்கவுண்டில் பணம் இல்லாத நேரமாகப் பார்த்து இந்த சந்தாத் தொகைக்கு பில் வந்தால் அதற்கான அபராதத் தொகை மேற்படி கம்பெனி மற்றும் நமது வங்கி இரண்டிலும் தண்டம் அழ வேண்டியிருக்கும்.
8. நாலைந்து மாதங்கள் கழித்து செல்லவிருக்கும் சுற்றுலாவுக்கான ஹோட்டல், டிக்கெட் புக் செய்யும் போது டெபிட் கார்டு வேண்டாமே. அட்வான்ஸ் தொகை என்று ஒரு தொகை உடனடியாக நமது அக்கவுண்ட்டிலிருந்து கழிப்பதோடு, நான்கு மாதங்களுக்கும் மேலாக நமது டெபிட் கார்டு எண் எல்லாம் அநாவசியமாக அவர்களிடத்தில் இருக்கும். எங்கேயும் எதுவும் நிகழலாம்.
9. பெட்ரோல் பங்க், ஹோட்டல்கள் போன்றவற்றிலும் டெபிட் கார்டை தவிர்க்கவும்.
10. ATM-மெஷின்களில் பணம் எடுக்கச் செல்லும் போது கூடுமான வரையில் உங்களுக்குப் பழக்கப்பட்ட மெஷின்களிலேயே பணம் எடுக்கவும். அப்படிச் செல்லும் போது அந்த மெஷினில் ஏதாவது சந்தேகப் படும்படியாக மாற்றங்கள் தெரிகிறதா என்றும் கவனிக்கவும். மெஷினிலேயே ஆட்டையைப் போட்டு நம்மை அம்பேல் ஆக்கும் டெக்னாலஜி திருடர்கள் உலவ ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதால் அதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
நன்றி : மாயவரத்தான்