IPL போட்டி இறுதிப்போட்டியை நெருங்கி விட்டது.இந்த கிரிக்கெட் மோகம் எந்த அளவு மக்களை பாதித்துள்ளது என்பதை முகைதின் சகோதரர் என்பவர் அனுப்பிய கிழ்கண்ட மின்னெஞ்சல் உணர்த்துக்கிறது.
இளைஞர்களையும், போக்குவதற்கு பொழுதுள்ளவர்களையும் இன்றைய பொழுதில் முழுமையாக ஆக்கிரமித்திருப்பது ஐ பி எல் கிரிக்கெட் போட்டிகள். அனைத்துவகை செய்தி ஊடகங்களும் இது குறித்த செய்திகளை மக்கள் மறந்துவிடாதவாறு அவர்களுக்குள் திணித்துக்கொண்டே இருக்கின்றன. அப்படி திணிக்கப்படும் செய்திகளால் கிரிக்கெட் என்பது காற்றைப் போல், உணவைப்போல் இன்றியமையாததாகிவிட்ட ஒரு இளைஞனுடன் நடந்த உரையாடல் இது.
இந்த உரையாடலை தொடங்குமுன், இந்த உரையாடல் நடந்த களத்தைப் பற்றி அறிந்து கொள்வதும் தேவையானதாகும், அது இந்த உரையாடலின் பரிமாணத்தை உணர்த்த உதவும். சௌதி அரேபியா. இந்தியாவிலிருந்து வந்து இங்கு பணிபுரியும் சில மேல்மட்ட அதிகாரிகளுக்கு கனமான ஊதியமும், நிறைவான வசதிகளும் வாய்த்திருக்கலாம். ஆனால் கடைநிலை ஊழியர்களாக இங்கு பணிபுரியும் இந்தியர்களே அதிகம். அப்படி கடைநிலை ஊழியர்களாக இருக்கும் குறிப்பாக தமிழர்களும் குறிப்பிடத்தக்க அளவு பணிபுரியும் ஒரு நிறுவனத்தின் தங்கும் விடுதி. சனி முதல் வியாழன் வரை வேலை நாட்கள், வேலைநேரம் காலை எட்டிலிருந்து தொடங்கி மாலை நான்கு மணிவரை இடையில் ஒருமணிநேரம் மதிய உணவுக்காக இடைவேளை. சௌதியின் வேறுபல நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் ஓரளவு நல்ல நிலை. காலை ஆறுமணிக்கு எழுந்தால் காலைத்தேவைகளை முடித்து உணவாக ஒரு குப்புஸை (ஒருவகை ரொட்டி) கடித்துக்கொண்டு மதியத்திற்காக அடுக்குச்சட்டியில் (டிபன் கேரியர்) செய்து வைத்திருக்கும் உணவை எடுத்துக்கொண்டு ஏழுமணிக்குள் வந்தால் பேரூந்து கிடைக்கும், கொஞ்சம் தாமதமானாலும் அன்று விடுமுறை நாளாக எண்ணிக்கொள்ளவேண்டியது தான் சம்பளம் கிடைக்காது.
வேலை செய்யும் இடத்தில் நீண்ட வரிசையில் நின்று சோதனைகளை முடித்துக்கொண்டு உள்ளே சென்று எந்த நேரத்தில் அட்டையை அடித்துக்கொள்கிறோமோ (பஞ்சிங் கார்ட் சிஸ்டம்)அப்பொதிலிருந்து தான் நமது வேலை நேரம் தொடங்கும். எட்டு மணிக்குள் அடித்துவிட முடிந்தால் அன்று நமக்கு நல்ல நாள். பெரும்பாலானோருக்கு பத்து நிமிடம் வரை தாமதமாகிவிடும். திரும்பும் போதும் 4.10க்கு பேருந்து கிளம்பிவிடும் என்பதால் ஓரிரு நிமிடங்களுக்கு முன்னதாகவே அட்டை அடிக்கவேண்டியதிருக்கும், இவைகள் மொத்தமாக சேர்ந்து மாதக்கடைசியில் அரை நாளை விழுங்கியிருக்கும். மீண்டும் விடுதிக்கு வந்துசேர ஐந்து மணிக்கு மேலாகிவிடும்,. பின்னர் குளித்து முடித்து ஒரு தேனீரை போட்டு குடித்துவிட்டு, சமையலை தொடங்கினால் (இரவுக்கும் மறுநாள் மதியத்திற்கும்) இரவுச்சாப்பாட்டை முடிக்க ஒன்பதை தாண்டிவிடும். பின் அண்மையில் வெளிவந்த திரைப்படத்தை ஓடவிட்டு கட்டிலில் சாய்ந்தால் எப்போது தூங்கினோம் என்று அவர்களுக்கே தெரியாது. வெள்ளிக்கிழமை விடுப்பு என்பது ஒரு மகிழ்வான விடுதலை உணர்வை தரக்கூடிய ஒன்று. வாரத்தின் ஒவ்வொறு நாளும் வெள்ளிக்கிழமையை இலக்காகக் கொண்டே நகரும். வியாழன் இரவில் எல்லோரின் முகங்களும் சந்தோசத்தை பூசிக்கொண்டிருக்கும். பெரிய சத்தத்தில் திரைப்படப் பாடல்கள் ஒலிக்கும். ஒருபக்கம் இந்தி, மறுபக்கம் தமிழ், இடையில் மலையாளம், ஆங்கிலம் (பிலிப்பைனிகள்) என்று கலவையாய் பாடல்கள் ஒலிப்பது ஒரு தனி அனுபவமாக இருக்கும். வெள்ளி விடுமுறை என்றாலும் அறையை சுத்தம் செய்வது, துணி துவைப்பது போன்றவைகள் தான் வெள்ளியின் பகலை நிறைத்திருக்கும். இப்படியான தருணத்தில் தான் ஐ பி எல் வந்தது.
முதலில் இந்த வித்தியாசம் வெளிப்படையாக தெரிந்தது குளியலறைகளில் தான். வரிசையாக கட்டிவிடப்பட்டிருக்கும் குளியலறைகளில் மாலை ஐந்து மணிக்கு மேல் ரகளையாக இருக்கும். முதலில் குளிப்பதற்கு போட்டியே நடக்கும். ஏனென்றால், முதலில் வேகமாக வரும் தண்ணீர் பின்னர் படிப்படியாக வேகம் குறைந்து சிறுவன் ஒருவன் சிறுநீர் கழிப்பது போல் வரும். முதலில் நுழைபவர்கள் நேரம் எடுத்துக்கொள்ள வெளியில் இருப்பவர்களோ பொருமையிழந்து கதவை தட்டிக்கொண்டும், கத்திக்கொண்டும் இருப்பர். ஆனால் திடீரென்று குளியலறைகள் வெறிச்சோடின. சாவகாசமாக ஆறுமணிக்கு வந்தாலும் ஆனந்தமாய் குளிக்க முடிந்தது. பின்னர் விசாரித்தபோதுதான் தெரிந்தது. எல்லோரும் வேலையை விட்டு வந்ததும் கிரிக்கெட்டின் முன் அமர்ந்து தொலைக்காட்சிப் பெட்டியை வெறித்துப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது. உழைத்துக்களைத்தவர்களுக்கு அவர்களை உற்சாகப்படுத்தும் ஒரு மாறுதல் தேவைதான் என்றாலும். அத்தியாவசியமான எல்லாவற்றையும் தவிர்த்துவிட்டு ஒரு விளையாட்டு அனைத்தையும் விழுங்கிக் கொள்ள முடியுமென்றால் அது பொழுதுபோக்கா? இல்லை வேதனையா?
வயது இருபத்தைந்தை தாண்டியிருந்தாலும் தங்கைகளின் திருமணம் முடிந்த பிறகு தான் தனது திருமணம் என்பதில் உறுதியாக இருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இளைஞன் அவன். எவ்வளவு கடினமான வேலை என்றாலும் தயங்காமல் செய்யக்கூடிய கடின உழைப்பாளி. ஓவர்டைம் வேலை என்றால் முதலில் கைதூக்கும் அளவுக்கு தேவையுள்ளவன். என் நண்பனான அவனும் தான் இந்த கிரிக்கெட் அலையில் அடித்துச்செல்லப்பட்டிருந்தான். இனி நானும் அவனும்.
நான்: ஒருவன் பந்து வீசுவதும், ஒருவன் மட்டையால் அடிப்பதும் இன்னும் சிலர் பந்தை தடுப்பதும் என்று சற்றேறக்குறைய ஒரே மாதிரியான காட்சிகளாகவே திரும்பத்திரும்ப வரும் இதில் அப்படி என்னதான் இருக்கிறது இதில்?
நண்பன்: எல்லாவற்றையும் உங்கள் கண்ணோட்டத்திலேயே பார்க்கக்கூடாது. தமிழ் நாடு விளையாடும் போது தமிழன் என்றமுறையில் அதை பார்ப்பது ஒரு உணர்வு. ஒரு பொழுது போக்கு. வேலை நேரம் என்றால் பார்க்கமுடியுமா? வேலை முடிந்து வந்து தானே பார்க்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு ரிலாக்ஸ்.
நான்: இல்லை. நீங்கள் ஒரு படத்தை பார்ப்பதற்கும், வெறொரு நிகழ்சியை பார்ப்பதற்கும் கிரிக்கெட்டை பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது இல்லையா?
நண்பன்: ஆமாம் இருக்கிறது ஒரு படம் பார்ப்பது பொழுது போக்கு மட்டும் ஆனால் கிரிக்கெட் அதோடு கொஞ்சம் உணர்வும் கலந்தது, நம்முடைய அணி ஆடும் போது நாமே ஆடுவது போன்று ஒரு உணர்வு.
நான்: இந்த நம்முடைய அணி என்ற உணர்வு எப்படி வந்தது? தமிழ்நாட்டு அணி அல்லது இந்திய அணி என்பதாலா? என்றால் இந்த உணர்வு விளையாடும் போது மட்டும் தானா? அல்லது மற்ற தருணங்களிலும் வருமா? அதுவும் கிரிக்கெட் விளையாட்டில் மட்டும் தானே இந்த உணர்வு வருகிறது மற்ற விளையாடுகளில் வருவதில்லையே
நண்பன்: மற்ற விளையாட்டுகள் இருந்தாலும் எல்லோராலும் விரும்பப்படுவது கிரிக்கெட் தான். என்னதான் மாநில வித்தியாசம் இருந்தாலும் கிரிக்கெட் என்றதும் எல்லோரும் ஒன்றாகி இந்தியா எனும் உணர்வு வருகின்றதல்லவா அது தான் கிரிக்கெட்டின் வெற்றி.
நான்: இந்த தேசிய உணர்வு விளையாடில் மட்டும் தானா? தேசியம் என்பது நாடு காடு மலை இதுமட்டுமா? அல்லது நாட்டிலுள்ள மக்களா? நாட்டிலுள்ள மக்கள் குறித்து வராத தேசிய உணர்வு கிரிக்கெட்டில் மட்டும் வருகிறது என்றால் அது மெய்யாகவே தேசிய உணர்வு தானா?
நண்பன்: யார் சொன்னது விளையாட்டில் மட்டும்தான் என்று? கார்கில் போர் நடந்த போது தமிழகம் தான் அதிகம் நிதி கொடுத்தது. வடமாநிலத்தில் நடந்த ரயில் விபத்து குறித்து ஒரு பிலிப்பைனி தவறாக பேசியபோது சண்டையிடவில்லையா? இதையெல்லாம் என்னவென்று நினைக்கிறீர்கள் நீங்கள்?
நான்: இது என்ன மாதிரியான தேசிய உணர்வு? ரயில் விபத்து குறித்து அந்த பிலிப்பைனி என்ன மாதிரியான விமர்சனத்தை முன்வைத்தான்? இந்தியாவில் எதுவுமே சரியிருக்காது , புல்லட் ரயில் மாதிரியான வசதிகள் இல்லை, கடக்கும் பாதைகள் (லெவல் கிராசிங்) பாதுகாப்பற்று இருக்கும் என்று தானே. இதற்குத்தானே நீங்கள் பிலிப்பைன்ஸை விட இந்தியா முன்னேறிய நாடு என்று இந்தியாவின் வீரதீர பிரதாபங்களை எடுத்துவிட்டு சண்டையிட்டீர்கள். இதையே அந்த பிலிப்பைனி, மக்கள் மீது அக்கரையற்ற அரசுகள், பிலிப்பைன்ஸை போலவே ஊழல் மலிந்த அரசியல்வாதிகள், மக்களுக்கு சிறப்பான வசதிகளை, குறைந்தபட்ச குறைவற்ற சேவையை வழங்குவதில் அலட்சியமாக இருக்கும் அதிகாரிகளால் தான் இது போன்ற விபத்துகள் நடக்கின்றன என்று அவன் விமர்சனம் செய்திருந்தால் நீங்கள் சண்டையிட்டு இருப்பீர்களா? மாட்டீர்கள். ஆக உங்களின் தேசிய உணர்வு என்பது மக்களின் கோணத்திலிருந்தல்ல ஆள்பவர்களின் கோணத்திலிருந்து எழும் தேசிய உணர்வு. இந்த கிரிக்கெட்டும் அதே போன்ற ஒன்றுதான்.
நண்பன்: நீங்கள் என்ன சொல்கிறீர்கள் இதிலுமா அரசாங்கம் மக்கள் ஏழை பணக்காரன் என்று பிரித்துப்பார்ப்பது. எல்லோரும் தான் கிரிக்கெட் பார்க்கிறார்கள். அரசாங்கத்தில் வேலைபார்ப்பவர்கள் கிரிக்கெட் பார்ப்பதில்லையா? இந்தியா விளையாடுகிறது, தமிழ்நாடு விளையாடுகிறது என்றுதான் அவர்களும் பார்க்கிறார்கள். இதிலென்ன ஆள்பவர்கள் கோணம் மக்கள் கோணம்?
நான்: அப்படியில்லை. ஆள்பவர்களுக்கு எதிலெல்லாம் சாதமான அம்சங்கள் இருக்கிறதோ அதிலெல்லாம் தேசிய உணர்வு கிளறிவிடப்படும். ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி எல்லோரும் அதை தேசிய உணர்வாக ஏற்றுக்கொள்ள வைக்கப்படுவார்கள். கிரிக்கெட்டை எடுத்துக்கொள்ளுங்கள், கிரிக்கெட்டிலிருந்து கிடைக்கும் ஒட்டுமொத்த வருமானத்தில் கிட்டத்தட்ட முக்கால்பங்கு இந்தியா பாகிஸ்தான் இலங்கை இந்த மூன்று நாடுகளிலிருந்து கிடைக்கிறது. அதனால் தான் இந்த விளையாட்டு பெருமிதமாக தேசிய ஆளுமை கொண்டதாக இருக்கிறது.
நண்பன்: இருக்கட்டுமே, அதனால் என்ன? பிரிந்து கிடக்கும் மக்களை ஒன்றிணைக்கிறதே, அந்த வகையில் எடுத்துக்கொள்ளாலாமல்லவா?
நான்: நாம் எதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டுமென்பதை நாம் தீர்மானிப்பதில்லை என்பதுதான் இதில் புரிந்துகொள்ள வேண்டியது. கிரிக்கெட் அளவுக்கு மற்ற விளையாட்டுகளை பற்றி பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் செய்தி வருகிறதா? அப்படி வந்தால் அந்த விளையாட்டை நீங்கள் தேசிய உணர்வுடன் பார்த்துக்கொண்டிருப்பீர்கள். இதிலாவது ஒன்றுபடுகிறோமே என்று இதை மேலோட்டமாக புரிந்து கொள்ளக்கூடாது. அவர்களுடைய நலன் தான் இதில் குறிக்கோள், நாம் எந்த விசயத்தில் சேர்ந்திருந்தால் அவர்களுக்கு லாபமோ அந்த விசயத்தில் நாம் சேர்ந்திருக்குமாறு நிர்ப்பந்திக்கப்படுவோம். பிரிந்திருப்பது லாபமென்றால் அந்த விசயத்தில் பிரிந்திருக்க நிர்ப்பந்திக்கப்படுவோம். இது தான் இங்கு எல்லா விசயத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. கிரிக்கெட் உட்பட.
நண்பன்: அது எப்படி நான் கிரிக்கெட் பார்க்கவேண்டும் என்று யார் என்னை நிர்ப்பந்திக்க முடியும்? எனக்கு விருப்பமிருப்பதால் தான் பார்க்கிறேன். விருப்பமில்லாவிட்டால் பார்க்கமாட்டேன், அவ்வளவுதான்.
நான்: எது உங்களுடைய விருப்பம்? இரண்டு வாரமாக சி பிளாக்கில் ஏ சி வேலை செய்யவில்லை. கண்டுகொள்ளாமலிருக்கும் பராமரிப்புத்துறையில் போய் புகார்செய்வோம் என்று எல்லோரையும் அழைத்தேன். நீங்களும் கூட வருவதாய் சொன்னீர்கள். ஆனால் வந்தது மூன்று பேர்தான். நீங்களோ தோற்றுப்போன ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருந்து விட்டு தோற்றுப்போன உணர்வுடன் டோனியை திட்டிக்கொண்டிருந்தீர்கள். எத்தனை பேர் சமைப்பதற்கு நேரமில்லாமல் மதியத்திலும் குப்புஸை சப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். சமைப்பவர்கள் கூட ரசத்திற்கும் மோர்க்குளம்பிற்கும் மாறிவிட்டார்கள். நியாயமாக சொல்லுங்கள் சாப்பாட்டைவிட, ஏ சியை விட கிரிக்கெட் முக்கியமாகி விட்டதற்கு விருப்பம் மட்டும்தான் காரணம் என்கிறீர்களா?
நண்பன்: என்ன இருந்தாலும் எனக்கு விருப்பமில்லாவிட்டால் நான் பார்க்கமாட்டேன் அல்லவா?
நான்: உங்களுக்கு எப்படி இந்த விருப்பம் ஏற்பட்டது என்பதுதான் விசயம். எல்லா பத்திரிக்கைகளிலும் என்னென்ன தேதியில் என்ன நேரத்தில் எந்தெந்த அணிகள் ஆடுகின்றன என்ற விபரங்கள் மீண்டும் மீண்டும் வெளியிடப்படுகின்றன. எந்த அணிக்கு என்ன புள்ளிகள் என்று முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துகளில் வெளியிடுகின்றன. தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன. செய்திகளில் முக்கிய செய்தியாக வருகிறது. இப்படித்தானே உங்களின் விருப்பங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை விமர்சித்து கருத்துச்சொன்னால், உண்மையை சொன்னால் சிறைத்தண்டனை என்று சட்டமியற்றப்பட்டிருக்கிறது, அணுவிபத்து நடந்தால் அதுவரை லாபம் சம்பாதித்த முதலாளிகள் இழப்பீடு கொடுக்கவேண்டியதில்லை என்று சட்டம் வரவிருக்கிறது, பூமியிலுள்ள கனிமங்களை தனியாருக்கு கொடுக்கவேண்டுமென்பதற்காகவே அங்கு வாழ்ந்துவந்த பழங்குடி மக்களை விரட்டியடிக்கிறார்கள். இவைகள் பற்றி பத்திரிக்கைகளும் , தொலைக்காட்சிகளும் கிரிக்கெட்டைப்போல விரிவாக நிகழ்ச்சிகளை நடத்தியிருக்குமா? ஏன்? எது முக்கியம்? ஆக அவர்களுக்கு எதை மறைக்கவேண்டுமோ அதை மறைக்கிறார்கள், எதை வெளிப்படுத்த வேண்டுமோ அதை வெளிப்படுத்துகிறார்கள். சரியானதை விட சுலபமானதை செய்வதற்கு உங்களை பழக்கப்படுத்துகிறார்கள். நீங்கள் எதை செய்யவேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்களோ, அதை சுலபமாக உங்களுக்கு கிடைக்கும்படி செய்கிறார்கள். இது தான் உங்களின் விருப்பமாக மாறுகிறது.
நண்பன்: சரிதான், இதற்கு நான் என்ன செய்யமுடியும்? நான் ஒருவன் மாறுவதால் என்ன ஆகப்போகிறது.
நான்: இதுதான். எல்லோரும் கூறும் சப்பைக்கட்டு இதுதான். நீங்கள் ஒருவர் பார்ப்பதால் டோனி பத்து ரான் அதிகம் அடித்துவிட முடியுமா? இல்லை பாலாஜி ஒரு விக்கெட் அதிகம் எடுத்துவிடமுடியுமா? இருந்தாலும் நீங்கள் பார்க்காமல் இருப்பதில்லையே. உங்களுக்கு பயன்படாத ஒன்றை பார்த்து உங்கள் நேரத்தை வீணக்குவதைவிட பயனுள்ள நல்ல விசயங்கள் எதையாவது தெரிந்து கொள்ளலாமே.
நண்பன்: !!!!!!!!!! (மௌனம்)
என் நண்பன் பதில் சொல்லமுடியாமல் அமைதியாய் இருந்தாலும், அவன் கண்களில் அடுத்த இரண்டு ஆட்டங்களிலும் வென்றால்தான் அரைஇறுதிக்குள் நுழைய முடியும். டோனியால் வெல்லமுடியுமா? எனும் கேள்வியே தொக்கி நிற்கிறது என்பதை நான் அறிவேன். ஆனாலும் மாற்றங்கள் மெதுவாகவேனும் வரும், வந்தே தீரும்.
Thanks Mohideen - United Muslim Groups Mail
No comments:
Post a Comment