உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக....

Monday, April 26, 2010

இஸ்லாம் கூறும் மனித வள மேம்பாடு

இஸ்லாம் கூறும் மனித வள மேம்பாடு

இன்று தமிழில் பல மனித வள மேம்பாட்டு நூல்கள் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கப் பட்டும், நேரடியாக தமிழிலும் வருகின்றன. தமிழ் நாட்டிலும், தமிழர்கள் வாழும் பல வெளிநாடுகளிலும், தமிழில் பல்வேறு மனித வள மேம்பாட்டு பயிற்சி முகாம்கள் நடக்கின்றன. தமிழில் மனித வள மேம்பாட்டு நூல்களின் முன்னோடி பன்னூலாசிரியர் அறிஞர் எம். ஆர். எம். அப்துர் ரஹிம் அவர்களே. மனிதர்களுக்கு அனைத்து துறைகளிலும் வழிகாட்டும் இஸ்லாம், மனித வள மேம்பாட்டு துறையிலும் வழிகாட்டுகிறது.


நம்பிக்கை

இஸ்லாத்தின் அடிப்படையாக இருப்பது ஒரிறைக் கொள்கை. படைத்த ஒருவனைத் தவிர வேறு யாருக்கும் வழிபடக் கூடாது என்பதே, அதன் பொருள். இதனால் மனிதனது சுதந்திரம் இயல்பிலேயே உறுதி செய்யப்படுகிறது. அடுத்து, ஈமான் என்னும் நம்பிக்கையின் கிளைகளில், இறைநாட்டத்தை நம்புவதும் ஒன்று. இதனால், நன்மைகளும், தீமைகளும் இறைவனின் நாட்டத்தின் படியே நடக்கின்றன என்று நம்ப வேண்டும். இந்த அடிப்படையிலேயே நம் இறுதித் தூதர் முஹமது(ஸல்) அவர்கள், வளத்தில் பூரித்துப் போய்விடவும் வேண்டாம், சோதனையில் துவண்டு விடவும் வேண்டாம் என வழிகாட்டுகிறார்கள்.

பிரார்த்தனைகள்

இஸ்லாத்தின் ஐந்து கடமைகளும், மனித வள மேம்பாட்டுக் கலையை கற்றுத் தருகின்றன. ஒரே இறைவனை மட்டும் வழிபடுவதும், அவனது தூதர் முஹமது நபி(ஸல்) அவர்களது வழிகாட்டுதலின் படி நடப்பதும் முஸ்லிம்களின் முதல் கடமை. இதற்கான உறுதி மொழியை தெரிவிப்பதுடன் தங்கள் வாழ்விலும் கடைப்பிடிக்க வேண்டும். இது கலிமா என்னும் இஸ்லாத்தின் முதல் கடமை. தொழுகை நேர நிர்வாகத்தை கற்றுத் தருகிறது. நோன்பு கோபத்தை கட்டுப் படுத்துகிறது. ஜகாத், சக மனிதர்களின் துன்பத்தைக் களைகிறது. ஹஜ், உலகம் முழுவதும் வாழும் பல்வேறுபட்ட மக்கள் சமூகத்தை ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இஸ்லாம், தொழுகையைக் கொண்டும், பொறுமையைக் கொண்டும் இறைவனிடம் உதவி தேட நமக்கு வழிகாட்டுகிறது. இறைவினிடம் நாம் கேட்கும் பிரார்த்தனைகள் தன்னம்பிக்கையை அதிகரிப்பதாக நவீன உளவியலும் உறுதி செய்துள்ளது.

திருக்குர்ஆன்

திருக்குர்ஆனில் பல நபிமார்களின் வரலாறு சுட்டிக்காட்டப் படுகிறது. அவர்கள், சந்தித்த சோதனைகளும், அதனை அவர்கள் எதிர்கொண்ட விதமும் நமக்கு படிப்பினையாகும். அது போல, குர் ஆனை தினமும் ஓதுவதால், உள்ளத்துக்கு அமைதி கிடைப்பதுடன், நம் அன்றாட வாழ்வின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

முஹமது நபி(ஸல்) வாழ்க்கை வரலாறு


முஹமது நபி(ஸல்) அவர்களது மக்கா வாழ்க்கை, மதீனா வாழ்க்கை இரண்டிலுமே நமக்கு படிப்பினை இருக்கிறது. அவர்கள் நபித்தோழர்களுடன் பேணிய கூட்டு வாழ்வு, பொது வாழ்க்கையில் ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டுகிறது. அவர் வணிக வாழ்க்கையில் பின்பற்றிய நடைமுறைகள் வணிகர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளே. திருமண வாழ்க்கையில் தம் துணைவியரால் ஏற்பட்ட சோதனைகளை அவர் எதிர்கொண்ட விதம், திருமணமான ஆண்களுக்கு படிப்பினையென்றால், நபித்துணைவியரின் தியாக வாழ்க்கையும், நபித்தோழியரின் தியாக வாழ்க்கையும் திருமணமான பெண்களுக்குப் படிப்பினைகளே.


இவற்றையெல்லாம் விட, ஆட்சியாளராய் முஹமது நபி(ஸல்) எளிமை, தூய்மை, நேர்மை, நீதி ஆகியவற்றை கடைபிடித்தார்கள். ஒரு முஸ்லிமுக்கு எதிராக, யூதருக்கு சார்பாக நீதி வழங்கி சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டினார்கள். அவர்கள் ஒருபோதும், இனவெறியை ஆதரிக்கவில்லை. மாறாக, அதனைக் கடுமையாகக் கண்டிக்கவும் செய்தார்கள். இவற்றில் முஸ்லிமல்லாத ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல. முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கும் மிகப் பெரும் படிப்பினை இருக்கிறது.

நிறைவுரை

இஸ்லாம் கூறும் மனித வள மேம்பாடு என்பது தனியொரு நூலாகவே எழுத வேண்டிய தலைப்பாகும். இதனை ஒரு சிறிய கட்டுரையில் அடக்கி விட முடியாது. எனினும், இது தொடர்பாக மேலும் அறிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் தேவையான குறிப்புகளை அளித்துள்ளதாக நினைக்கிறேன். இக்கட்டுரையில் தகவல் பிழைகளிருப்பின் அன்புடன் சுட்டிக்காட்டுங்கள்.


நன்றி: பேங்காக் தமிழ் முஸ்லிம் பள்ளிவாசல் திறப்பு விழா மலர் - 25 ஆகஸ்டு 2005


Thanks Abdul Rahman

1 comment:

  1. really a superb article which i have ever read.. please send me more articles related this to gopikrish2008@gmail.com

    ReplyDelete