உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக....

Sunday, June 13, 2010

பாசிச மோடிக்குப் புரியுமா ஒரு தாயின் பரிதவிப்பு?

பாசிச மோடிக்குப் புரியுமா ஒரு தாயின் பரிதவிப்பு?




குஜராத் மாநிலத்தின் கோத்ராவைச் சேர்ந்த பீபி காத்தூன் எனும் தாயின் மூன்று மகன்கள் கடந்த எட்டு ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோத்ராவில் ரயில் பெட்டி ஒன்றுக்குத் தீ வைத்து 58 பேரைக் கொடூரமாகக் கொலை செய்ய உதவினர் என்பதே இவர்கள் மீதான குற்றச்சாட்டு. இதுவரை இக்குற்றம் நிரூபிக்கப்படவில்லை. இச்சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாதச் சதி இருப்பதாகக் குஜராத் அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. அச்சதியை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என உயர்நீதி மன்றமும் உச்சநீதி மன்றமும் தீர்ப்பளித்துவிட்ட போதிலும் இம்மூவருக்கும் இன்றுவரை பிணைகூட கிடைக்கவில்லை.



கோத்ரா ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள, பெரும்பாலும் உழைக்கும் மக்கள் நிறைந்த சேரியான ரஹ்மத் நகரில்தான் பீபி வசித்து வந்தார். கோத்ரா சம்பவம் நடந்த அன்று மாலை இச்சேரிக்குள் குவிந்த சீருடையணியாத போலீசார் பீபி காத்தூனின் மூன்று மகன்கள் உட்பட 14 இளைஞர்களைப் பிடித்துச் சென்றனர். இதனைக் கண்டு கொதித்தெழுந்த அப்பகுதிப் பெண்களிடம் தங்களது உயரதிகாரி விசாரித்தவுடன் அவர்களை அனுப்பிவிடுவதாகப் போலீசார் கூறினர். ஆனால் எட்டு ஆண்டுகளாகியும் அவர்கள் யாரும் திரும்பிவராத நிலையில் "இன்னமுமா அந்த உயரதிகாரி வரவில்லை?'' என பீபி காத்தூன் வருத்தத்துடன் கேட்கிறார்.



கைதான அனைவரையும் முதலில் ரயில்வே காவல்நிலையத்தில் வைத்திருந்தனர். பின்னர் அவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. அவர்கள் இருக்குமிடத்தைப் பற்றிச் சொல்லக்கூட போலீசார் மறுத்துவிட்டனர். மூன்று மாதங்களுக்குப் பிறகு தாங்கள் அகமதாபாத் சபர்மதி சிறைச்சாலையில் இருப்பதாகக் கூறி பீபியின் மகன்கள் தங்களின் தந்தைக்குக் கடிதம் எழுதினர். கோத்ராவில் ரயில் பெட்டியைக் கொளுத்த சதி செய்ததாக இவர்களுடன் சேர்த்து 131 பேர் மீது "பொடா'' கருப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டது.



சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தன் மகன்களைப் பார்த்த பீபிக்கு இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. அவர்கள் உடல் மெலிந்து பேயறைந்தது போலக் காணப்பட்டனர். தாங்கள் பட்ட அடிகள் சித்திரவதைகளைப் பற்றி அருகில் இருந்த சிறை ஊழியர்களுக்குக் கேட்காவண்ணம் கிசுகிசுக் குரலில் அவர்கள் விம்மினார்கள். தாங்கள் சிறுநீர் கழித்த வாளியிலேயே தண்ணீர் குடிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறினர். தன் மகன்களிடம், "நம்பிக்கை தளர வேண்டாம்'' என்றும் "சிறையிலிருந்து வெளிக்கொணர தன்னால் இயன்றதனைத்தையும் செய்வதாகவும்'' அவர்களின் தந்தை உறுதியளித்தார்.



பீபியின் மூத்த மகனுக்கு, பள்ளி செல்லும் வயதில் இரு மகன்கள் இருந்தனர். கைதாவதற்குச் சில மாதங்களுக்கு முன்புதான் இரண்டாவது மகனுக்குத் திருமணமாகியிருந்தது. அவர் சிறையிலிருக்கும்போதுதான் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பீபியின் கடைசி மகனோ பதின்ம வயதில் இருந்தான். வேலைக்குச் சென்று சம்பாதிக்க மகன்கள் யாரும் இல்லாத நிலையில் வீட்டில் உணவுக்கே திண்டாட்டமானது. பீபியின் வயதான கணவர் கிடைத்த வேலையைச் செய்துகொண்டிருக்க பீபியும் அவரது இரு மருமகள்களும் வீட்டு வேலை கிடைக்குமா எனத் தேடிக் கொண்டிருந்தனர். ஆனால் தீவிரவாதியின் குடும்பம் என்றும் பொடா குடும்பம் என்றும் முத்திரை குத்தப்பட்டதால் யாரும் வேலை கொடுக்கவில்லை.



2004ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஐக்கிய முன்னணி அரசு, பொடா கருப்புச் சட்டத்தை திரும்பப் பெற்றது. ஆனால் சட்டத்தை முன்தேதியிட்டுத் திரும்பப் பெறாததால் பொடாவில் கைதானவர்கள் விடுவிக்கப்படவில்லை. அச்சட்டத்தின் அடிப்படையிலேயே வழக்கு நடந்தது. தில்லியின் புகழ்பெற்ற கிரிமினல் வழக்குரைஞர்களான நித்தியா இராமகிருஷ்ணன் மற்றும் ஹசன் போன்றவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடினர். குஜராத் அரசின் வாதப்படி தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் முன்பே திட்டமிட்டு இதனைச் செய்ததாகவும் வெளியிலிருந்து ரயில் பெட்டிக்குள் பெட்ரோலை, தனது குடும்பத்தை உயிரோடு வைத்திருக்கப் பிச்சையெடுக்கும் இழிநிலைக்குத் தள்ளப்பட்ட கோத்ராவைச் சேர்ந்த ஏழைத்தாய் பீபி காத்தூன் ஊற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் வெளியிலிருந்து ரயில் பெட்டிக்குள் பெட்ரோலை ஊற்றுவது என்பது மனித சக்தியால் இயலாத காரியம் எனத் தடயவியல் அறிக்கை கூறுகிறது. அதேபோல ரயில் பெட்டிக்குள் பெட்ரோலின் மூலக்கூறான "ஹைட்ரோ கார்பனின்'' தடயங்கள் எதுவும் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மாநிலப் போலீசாரால் புனையப்பட்ட இவ்வழக்கில் இதுபோன்று மேலும் பல ஓட்டைகள் இருப்பதாக இவ்வழக்குரைஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.



இவ்வழக்கு நடைபெற்ற எட்டு ஆண்டுகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சாதகமாகப் பல தீர்ப்புகள் வந்துள்ளன. ஒவ்வொரு முறையும் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என பீபியும் மற்றவர்களும் நம்பினர். ஆனால் இவர்களது நம்பிக்கை ஒவ்வொரு முறையும் தகர்ந்தது. 2005ஆம் ஆண்டில் பொடா மறு ஆய்வுக்குழு இந்த வழக்கில் தீவிரவாத சதி இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை எனவும் இந்தியாவின் பாதுகாப்பைக் குலைக்கும் அம்சங்கள் எதுவும் இல்லை எனவும் உறுதிப்படுத்தியது. இதனால் பொடாவின்கீழ் இவர்கள் மேல் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இதனை ஏற்றுக்கொள்ள விரும்பாத குஜராத் அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால் உயர்நீதி மன்றமும் பின்னர் உச்சநீதி மன்றமும் மறு ஆய்வுக் குழுவின் முடிவையே உறுதிசெய்தன. இருப்பினும் குஜராத் அரசு குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்கவில்லை. அவர்கள் மீது சாதாரண குற்றவியல் சட்டங்களின்கீழ் வழக்குத் தொடுத்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கிடைக்கக்கூடிய தண்டனைக் காலத்தைவிட அதிகமான வருடங்களை விசாரணைக் கைதிகளாகவே சிறையில் கழித்துவிட்டனர். இருந்தபோதிலும் இவர்களுக்கு சாதாரண குற்றவியல் சட்டங்களின்கீழ் கூட பிணை வழங்கப்படவில்லை.



இதனிடையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பீபியின் கணவர் தொண்டைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். சாகக் கிடக்கும் தங்கள் தந்தையைக் கடைசியாகப் பார்க்க மகன்களுக்கு ஆளுக்கொரு நாள் பரோல் கொடுக்கப்பட்டது. அவரது மரணத்திற்குப் பிறகு அப்பெரிய குடும்பத்தைச் சுமக்கும் பாரம் பீபியின் தோளில் இறங்கியது. மூப்பின் காரணமாகவும் ஒரு விபத்தின் காரணமாகவும் அவரால் வேலை செய்ய இயலவில்லை. அவர் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். நடக்க முடியாத அவர் கோத்ரா நகரத்து வீதிகளில் நொண்டி நொண்டிச் சென்று பிச்சையெடுக்கிறார். பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த அவரது மூத்த பேரனின் படிப்புக்குத் தேவைப்பட்ட பணத்தை அவர் பிச்சையெடுத்துச் சேர்த்துத் தந்தார். ஆனால் அவன் பொதுத்தேர்வில் தோல்வியடையவே அவனைப் பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டார். அவருடைய இளைய பேரனை இன்னமும் முன்னதாக எட்டாம் வகுப்போடு நிறுத்திவிட்டார். அவர்கள் இருவரும் தற்போது தினமும் ஐம்பது ருபாய் கூலிக்குப் பட்டறையில் வேலை செய்கின்றனர்.



சிறையிலிருப்பவர்களைப் பார்க்கச் செல்வதற்கான பேருந்துக் கட்டணச் செலவுகள் அவர்களது ஒரு மாதச்சம்பளத்தை விழுங்கிவிடுவதால் தற்போது அவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே செல்கின்றனர். சிறையில் உள்ள பீபியின் மகன்கள் உடல் மெலிந்து காசநோய் போன்ற கடும் நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பீபியின் கடைசி மகனான சபீக் சிறையில் புத்தி சுவாதீனம் இழந்துவிட்டான். காகிதத்தையும் குப்பையையும் பொறுக்கித் தின்கிறான். சில சமயங்களில் பிற கைதிகளையும் சிறை ஊழியர்களையும் தாக்குகிறான். தன் குடும்பத்திரையே அவனால் அடையாளம் காணமுடியவில்லை. "அவனை அவர்கள் பிடித்துச் சென்ற வயதில் பால்பற்கள் விழுந்து அவனுக்கு புதிய பற்கள்கூட வளரவில்லை. எனது செல்லமகனை அவர்கள் எப்படி எல்லாம் சீரழித்து விட்டார்கள்?'' என பீபி கதறுகிறார். அவனுக்கு சிகிச்சையளிக்க பரோல் கொடுக்குமாறு அவர்களது வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.



உள்ளத்தை உலுக்கும் இந்தச் செய்தியை ஹிந்து ஆங்கில நாளேட்டில் எழுத்தில் வடித்த ஹர்ஷ் மந்தர் அவர்களும் அதன் சுருக்கத்தை, "பாசிச மோடிக்குப் புரியுமா ஒரு தாயின் பரிதவிப்பு?" எனும் தலைப்பில் 'புதிய ஜனநாயகம்' இணைய இதழில் எழுதிய திரு. சுந்தர் அவர்களும் அதைப் பதிவேற்றிய தமிழரங்கம் இணையமும் நமது ஆழிய நன்றிக்கு உரியவர்கள்.



- சத்தியமார்க்கம்.காம்



தனது குடும்பத்தை உயிரோடு வைத்திருக்கப் பிச்சையெடுக்கும் இழிநிலைக்குத் தள்ளப்பட்டதை எண்ணி பீபி கூனிக் குறுகுகிறார். மேலும் தன் மகன்கள்மீது இப்படிப்பட்ட படுபாதகக் குற்றம் சுமத்தப்பட்டதை எண்ணி வெட்கப்படுகிறார். "மகனே! நான் படிப்பறிவில்லாதவள். இந்தச் சட்டங்கள் எனக்குப் புரிவதில்லை. ஆனால் அப்பாவியான என் மகன்கள் ஏன் இத்தனை ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என எனக்கு விளக்குங்கள்'' எனக் கேட்கிறார்.



தன் பேச்சைக் காதுகொடுத்துக் கேட்பவர்களிடம் அவர் கெஞ்சுவது ஒன்றுதான்: "என் மகன்களைச் சிறையிலிருந்து விடுவிக்க உங்களால் உதவ முடியுமா? அவர்கள் விடுதலையாவதைக் காண நான் உயிருடன் இருப்பேனா?''



மூலம் : தி ஹிந்து



தமிழில் : சுந்தர் - புதிய ஜனநாயகம் (தமிழரங்கம்)


Thanks Satyamargam

No comments:

Post a Comment